மும்பையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முந்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி நேற்று முந்தினம் காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 

இதில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது சட்டவிரோதம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தின் பாதி நிறைவேறியிருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடந்த துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடியும் பன்னீர் செல்வமும் கலந்து கொண்டனர். 

இதனால் அணிகள் இணைப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் எடப்பாடி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பன்னீர்செல்வமும், தேர்வு செய்யப்பட உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மும்பையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார்.