ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேனியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்துக்குள் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆசிரியைகளை மிரட்டினர். இவ்வளவு சம்பளம் உங்களுக்குப் போதாதா என அவர்களிடம் கேள்வி எழுப்பி அச்சுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் நேரு சிலை அருகே இன்று 500 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக தேனி நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் மற்றும் சிலர் அங்கிருந்த ஆசிரிளைகளைப் பார்த்து, இவ்வளவு சம்பளம் எங்களுக்கு போதாதா? மாணவர்களுக்குத் தேர்வு வரப் போகுது, ஒழுங்கா எல்லோரும் ஸ்கூலுக்கு போய் வேலை செய்யும் வழியைப் பாருங்க என மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் அதைச் சொல்ல நீங்கள் யார்? நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம் என அங்கிருந்த ஆசிரியர் – ஆசிரியைகள் கோரஸாக கூறினர்.
இதையடுத்து கடும் கோபமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆசிரியர்களை மிரட்டினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் கிருஷ்ணகுமார் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் போராடிய ஆசிரியைகளை மிரட்டியதாக கிருஷ்ணகுமார் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவர் மீதும் போலீஸில் புகார் அளிக்க ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 28, 2019, 10:26 PM IST