Asianet News TamilAsianet News Tamil

அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அட்வைஸ்...!

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைத்தால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வுநிலை ஏற்படும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

OPS statement to MK Stalin for Teacher Selection Board change
Author
Chennai, First Published Jun 2, 2021, 6:43 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளதைப் பார்க்கும்போது "அழிப்பது சுலபம் ஆக்குவது க்ஷனம்" என்ற பழபொழிதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

அரசின் நலத் திட்ட உதவிகள் மக்களை விரைந்து சென்றடைய வேண்டும், மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்துத்தான் புதிய மாவட்டங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், புதிய கோட்டாட்சியர் அலுவலகங்கள், புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

OPS statement to MK Stalin for Teacher Selection Board change

இந்த அடிப்படையில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிவதைக் கருத்தில் கொண்டு, மாணவ மாணவியரின் நலனைக் காக்கும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக 1987-ஆம் ஆண்டு பாட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் இலட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்பும் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்து வந்தது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று, மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலியிடங்கள் மற்றும் புதியதாகத் தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று "மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்" அதாவது Medical Services Recruitment Board என்ற அமைப்பு மாண்புமிகு. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட்டு வருகின்றன.

OPS statement to MK Stalin for Teacher Selection Board change


இந்தச் சூழ்நிலையில், கட்டமைப்பு இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை, நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லாமை, வெளிப்படைத் தன்மை இல்லாமை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, அதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதமாக்கும் செயலாகும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காவலர்களுக்கான குடியிருப்பைக் கட்ட தனி வீட்டு வசதிவாரியம் தேவை என்பதன் அடிப்படையில், 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தை இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கினார்கள். இதன் காரணமாக, காவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று, காவலர்களுக்கு மிக எளிதில் குடியிருப்புகள் கிடைக்கும் சூழ்நிலை உருவானது. 

OPS statement to MK Stalin for Teacher Selection Board change

ஆனால், 1989-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக காவலர்களுக்கான குடியிருப்புகளை கட்டுவதில் தொய்வு ஏற்பட்டது. காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் துறை கட்டடங்கள் ஆகியவை விரைந்து கட்டப்பட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 1991-ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தை மீண்டும் ஏற்படுத்தினார்கள். இந்த வாரியம் மீண்டும் அமைக்கப்பட்டதன் காரணமாக, காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் துறை கட்டடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்படுமேயானால், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வு நிலை ஏற்படும். ஏனென்றால், இலட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப் பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கும்போது, அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

OPS statement to MK Stalin for Teacher Selection Board change

ஆசிரியர் தேர்வு வாரியம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்காக இது கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அவற்றை முற்றிலும் போக்கி, வாரியம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios