அண்மையில் வாரணாசியில் நடைபெற்ற பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில்  ஓபிஎஸ் மவரது மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் காவி உடை அணிந்திருந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போதாகவும், ஆளுநர் பதவி கேட்கத்தான் வாரணாசி சென்றதாகவும் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள  ஓபிஎஸ் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளிளிட்டுள்ளார்.

அதில் அ.தி.மு.க.வின் ஒரு சாதாரண தொண்டனாக பொதுவாழ்க்கையில் களப் பணியாற்றி பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், புனிதமிக்க சட்டப்பேரவைக்குள் பாதம் பதிக்கிற வாய்ப்பை வழங்கி, பிறகு அரசியல் சாசனத்தின் பேரில் வருவாய்த்துறை அமைச்சராக, நிதி அமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, இவையாவிற்கும் மேலாக இந்த நாட்டு அரசியலையே தென்னாட்டு பக்கம் திருப்பிக்காட்டிய நான் வணங்கும் தெய்வத் தாயாம் ஜெயலலிதா வீற்றிருந்த முதலமைச்சர்  இருக்கையில் 3 முறையும், அதுபோலவே அதிமுகவிக் வின் பொருளாளராக ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அமர்த்தியும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்துக்கு இன்று ஒருங்கிணைப்பாளராகவும், ஏராள வாய்ப்புகளை எனக்கு வழங்கி என் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்து ஒரு சாதாரண பெரியகுளத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு இத்தனை பெருமைகளை அள்ளித் தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பா.ஜ.க.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன.

என் உயிர் போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால்பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

என் மீது பரப்பப்படும் அவதூறுகளை, அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கட்சி தொண்டனும் சரி, என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள் என்ற எனது ஆழமான நம்பிக்கையையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன் என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.