அதிமுகவுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பேசிய பன்னீர்செல்வம், ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதலமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அதிமுக இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதிமுக மிகப்பெரிய ஆலமரம்,  கலைஞரால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. 

திமுக ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக திமுக அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் சொல்கிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அதிமுக ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் நடக்காது. அதிமுகவுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என ஆவேசமாக பேசினார்.