தேனி மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கில் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் நடத்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அப்போதே தேனி மக்களவையில் தொகுதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இதனிடையே, தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அறிவிக்கக் கோரி மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தேனி மக்களவை எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்