ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் குச்சனூர் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று முன்தினம் இந்தகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் மக்களவை உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திரநாத் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இந்நிலையில் ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த முன்னாள் காவலர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வேல்முருகன் மீது தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.