ops pressmeet about admk

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா, ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டது.

கடந்த 12ம் தேதி நடக்க இருந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால், டிடிவி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின் கம்பம் சின்னமும் வழங்கப்பட்டது.

இதையொட்டி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுப்பதாக பேசிய டிடிவி.தினகரன், இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் அணுகியுள்ளது. முன் பணமாக ரூ.1.30 கோடி கொடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக சுகேஷ் சந்திராவை நேற்று அதிகாலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தினகரன் மீது வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில், பிளவு பட்ட இரு அணிகளும் ஒன்று சேருவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இரு தரப்பு எம்எல்ஏக்களும் இன்று சென்னை துறைமுகத்தில் உள்ள சென்னை போர்க்கப்பலில் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “இரு அணிகளும் ஒன்று சேருவதில் எங்களுக்கு எவ்வித வேறுபாடும் இல்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த கொள்கை மாறாமல் கொண்டு செல்ல யார் விரும்பினாலும், அவர்களுடன் இணைய தயராக இருக்கிறோம்.

கட்சியையும், ஆட்சியையும் ஒரே குடும்பத்தினர் கொண்டு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதை ஏற்க முடியாது. இரு அணிகள் இணைவது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.