OPS only EPS formed secretarial Alliance to make chief minister - m.k. stalin

எடப்பாடி பழனிசாமி உடன் ரகசிய கூட்டணி அமைத்து அவரை முதலமைச்சராக்க பாடுபட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கூவத்தூரில் மிகப்பெரிய கொண்டாட்டம் நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது இரகசிய கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பாடுபட்டவர் ஓ. பன்னீர் செல்வம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு மவுன விரத நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஓ. பன்னீர்செல்வம். 

அந்த பேச்சுவார்த்தை அம்பலத்திற்கு வந்ததும் ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான்.

இப்போது முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், கமிட்டி கலைப்பு, இணைப்பு கிடையாது என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ. பன்னீர்செல்வம்தான். 

ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அதிமுக.விற்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ரகசிய கூட்டணியின் வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என்று ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தமம் வேடம் போடலாமா?

ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில்தான் இருந்தார்.

அப்போது ஏன் வழக்குபோட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத ஓ. பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு “ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி என்று பேசுவது தி.மு.க.,விற்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு. 

குட்கா டைரி ஊழல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பியபோதெல்லாம் மவுன விரதம் இருந்து விட்டு, இன்றைக்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளில் ஓ. பன்னீர்செல்வம் ஈடுபடுவது அரசியலில் விபத்தால் கிடைத்த இடமும் பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்று புரிகிறது. 

ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு கூறியுள்ளார்.