ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைவாரா? முன்னாள் அமைச்சர் வளர்மதி கருத்தால் பரபரப்பு!!
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவது நிச்சயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவது நிச்சயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!
அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்து அவரை தூக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே வருகிற ஜூலை 11 தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுகுழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு மேடை அமைக்கும் பணி..! திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமே திமுகவை வீழ்த்துவது தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறப்பாக ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, இபிஎஸ் பொதுச் செயலாளராக வர வேண்டும். அதுவே எங்களது விருப்பமும் தொண்டர்களின் விருப்பமுமாக உள்ளது. திமுக அமைச்சர்களை சட்டசபை கூட்டத்தொடரில் ஓபிஎஸ் பாராட்டி பேசுகிறார். அவரும் அவரது மகனும் திமுகவோடு உறவு வைத்துள்ளனர். ஓபிஎஸ், அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான். பாஜகவுடன் நெருக்கமாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பாஜகவில் இணைவார் என்று தெரிவித்தார்.