இருளும் சோகமும் விலகி புதிய ஆண்டு பிரகாசிக்கட்டும்.!ஒன்றுபட்டு நிற்போம்,ஓயாது உழைப்போம்-இபிஎஸ்,ஓபிஎஸ் வாழ்த்து
இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் என எடப்பாடி பழனிசாமியும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிருப்தி நிலையை நீக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஓயாது உழைப்போம் என ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு வாழ்த்து
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும்; அதனைத் தொடர்ந்து, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று, எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
இருளும் சோகமும் விலகட்டும்
புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்; இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்; நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டு மக்களுக்கு இனிய புத்தாண்டாக அமையட்டும்... பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!!
அசாதாரணமான சூழல் நீங்கட்டும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா தொற்று, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, விலைவாசி உயர்வு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என ஒருவிதமான அசாதாரணமான நிலை நீங்கி, 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, ஏழ்மை நிலை அகன்றிடுவதற்காக மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து நலத் திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.
ஓன்றுபட்டு நிற்போம்
தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிருப்தி நிலையை நீக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஓயாது உழைப்போம், மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்போம்.மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்ந்த வாழ்வையும், நீங்காத வளங்களையும், அதிக நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் எனஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.