உயிர் போகும் நாளில்கூட அதிமுகவின் கொடி போர்த்துவதையே பெருமையாகவும், இலட்சியாகவும் கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்தியாக்கும் ஊடகங்களை நினைத்து வேதனை கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பிரதமர் மோடி தனது காசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கு முதல் நாள் 25ஆம் தேதி காசி வீதிகளில் பேரணி சென்றார். இதை ஒட்டி தனது மனைவி, மகனுடன் காசி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பினார். அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் இல்லாததால் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்ததால் கடுப்பான ஓபிஎஸ் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெரியகுளம் நகராட்சித் தலைவர், வருவாய்த் துறை அமைச்சர், நிதியமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர்... இவை யாவற்றுக்கும் மேலாக தெய்வத் தாயாம் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் பதவியில் மூன்று முறை, கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகளுக்கும் மேல் பதவி, இன்று எம்.ஜிஆர். உருவாக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று நான் கனவிலும் எதிர்பார்த்திராத உயரங்களைத் தந்த அதிமுகவை விட்டு நான் பாஜகவுக்குச் செல்லப் போகிறேன் என்று அடுக்காத புரளியை அவதூறாகப் பரப்பி வருகின்றன உள் நோக்கம் படைத்த சில ஊடகங்கள்.

அரசியலில் எதிர்நிலைகள் கொண்டபோதும் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. மேலும், பாஜக மாநிலங்களவையில் நெருக்கடியான நிலையில் இருந்தபோதும், தனது வலுவான ஆதரவால் பாஜகவின் ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதா. அதுபோல் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து வாழ்த்தியவர் மோடி” என்று குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தன் தலைவியை மதித்த தலைவர்களை ஜெயலலிதா வழியிலேயே மதிப்பதுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்துக்கு உகந்த முடிவாகும்.

அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி எட்ட இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து குலைநடுக்கம்கொள்ளும் குள்ள நரிகள் என் மீது வதந்திகளைப் பரப்பி என்னையும் என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனை கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோடு இணைகரம் கொண்டு இந்த இயக்கத்தை இமையாகக் காப்பதற்கும் இந்திய அரசியலை இரு இலை இயக்கம்தான் தீர்மானிக்கும் என்ற பொற்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கும் என் ஆயுள் முழுவதையும் அதிமுகவுக்காக ஒப்படைத்துத் தொண்டாற்றும் ஊழியன் நான். உயிர் போகும் நாளில்கூட அதிமுகவின் கொடி போர்த்துவதையே பெருமையாகவும், இலட்சியாகவும் கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்தியாக்கும் ஊடகங்களை நினைத்து வேதனை கொள்கிறேன்.

ஒருவரின் உழைப்பை, பெருமையை, கண்ணியத்தைப் பொய்யான எழுத்துகளால் கறைபடுத்திவிடலாம் என்று திட்டமிடுபவர்களுக்கு மக்கள் சக்தியும், இறைசக்தியும் உரிய கூலி கொடுக்கும். என் மீது பரப்பப்படும் அவதூறுகளைக் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்” என்று முடித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.