ஓபிஎஸ் மாவட்ட செயலாளரை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அவரு ரொம்ப தடுமாறுகிறார்.. போட்டுத்தாக்கிய முருகானந்தம்..!
கட்சியில் உறுப்பினராகவே இல்லாத செந்தில் முருகனை, வேட்பாளராக அறிவித்தது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 அந்த அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
இதனிடையே அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. இதில், எடப்பாடி பழனிச்சாமியின் தென்னரசுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார். இந்நிலையில், கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 பேர் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அந்த அணியில் இணைந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகானந்தம்;- கட்சியில் உறுப்பினராகவே இல்லாத செந்தில் முருகனை, வேட்பாளராக அறிவித்தது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.
ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாதவர் கட்சியை எப்படி நடத்துவார். எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். எடப்பாடி இரட்டை இலையை மீட்டெடுத்துள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமி கையில் தான் இனி அதிமுக இருக்கும் என்றும் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.