தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.  கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல பிரச்சனைகள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்ம யுத்தம் நடத்தி அதன் மூலம் மக்களிடம் பெரும் செல்வாக்கை பெருக்கிக் கொண்டார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சமரசம் செய்துகொண்டு மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றார். பிறகு அவரது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இணைப்புக்குப் பிறகு பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் அவருடன் இருந்த ஆதரவாளர்களுக்கு பதவி வாங்கி தர முடியவில்லை. இதனால் பதவி கேட்டு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி தந்தனர். இந்நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி பதவியை பெறலாம் என்ற நோக்கத்துடன் டெல்லி சென்றார். ஆனால் அவர் ஆசை நிறையாசையானது. எம்எல்ஏவாக இருந்த போது பிரதமர் மோடியை சந்தித்த ஓபிஎஸ், துணை முதல்வர் என்ற அந்தஸ்துடன் டெல்லி சென்ற போது மத்திய அமைச்சரைக்கூட சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.  

பிரதமர் மோடியின் முயற்சியால் தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று ஏற்கனவே பன்னீர்செல்வம் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக பாஜக மேலிடம் கோபத்தில் இருந்தது. இந்நிலையில் தனது சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து நிர்மலா சீதாராமன் உதவி செய்ததாக ஓபிஎஸ் அளித்த பேட்டி பாஜக மேலிட தலைமையை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அப்போது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கட்சித் தேசியத் தலைவர் அமித் ஷா பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாமல் திரும்பியது அவரது செல்வாக்கு ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் முதல்வருக்கு எதிராக அவரால் வாய் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை பெற்று தர முடியாமல் ஓபிஎஸ் விழிபிதிங்கி உள்ளார். இதன் காரணமாக அவரது 
ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.