“விளையாட்டு செய்திகள் : அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம்..!!” இப்படி கலாய்ச்சா எப்படி?
இந்த நடவடிக்கை என்பது ஏதோ விளையாட்டுப் பிள்ளைகள் செய்வது போல இருக்கிறது. குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் மீது இருந்த நம்பிக்கைகள் குறைய தொடங்கி விட்டன.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டிருக்கும் செயல், இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன என்பது போல உள்ளது என்று பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி 10 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அதிமுகவில் சசிகலா விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றி அதிமுகவில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்ட அதிமுகவினர் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா , சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனையத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஓ. ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டனர். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளது பற்றி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சசிகலாவை சந்தித்த காரணத்தால் ஓ. ராஜா உள்ளிட்ட சில அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த நடவடிக்கை என்பது ஏதோ விளையாட்டுப் பிள்ளைகள் செய்வது போல இருக்கிறது. குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் மீது இருந்த நம்பிக்கைகள் குறைய தொடங்கி விட்டன. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஏதோ விளையாட்டு விளையாடுவது போல உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை இருவரும் நடத்தி வருகிறார்கள். எனவே, இந்தச் செயல், இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன என்பது போல உள்ளது. ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் மோதும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.