விவாதங்களில் சசிகலாவை மிகக் கடுமையாக பேசக் கூடாது என சிலர் மூலம் எனக்கு சொல்லி அனுப்பியதாகவும் சசிகலாவுடன் அதிமுக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் கட்சி தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர்கள் ஜகா வாங்கினர். இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதையடுத்து அவர் உடனடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடியும் பன்னீரும் அறிவித்தனர். 

இதைதொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த கே.சி.பி, என்னை நீக்கியிருப்பதன் மூலம் பாஜகவின் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது அம்பலமாகி உள்ளது எனவும் இதுவரை பாஜகவை எதிர்த்து பேசக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் திராவிடம் குறித்தும் பாஜகவை எதிர்த்தும் பேசியதன் அடிப்படையில் தான் பாஜகவை எதிர்ப்போம் என கூறியதாகவும் குறிப்பிட்டார். 

விவாதங்களில் சசிகலாவை மிகக் கடுமையாக பேசக் கூடாது என சிலர் மூலம் எனக்கு சொல்லி அனுப்பியதாகவும் சசிகலாவுடன் அதிமுக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார் கே.சி.பி.