காவித் துண்டு அணிந்து இந்து முன்னணி விழாவில் அதிமுக எம்.பி ரவீந்திர நாத் குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி தொகுதி அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் பாஜகவில் இணையாத குறையாக அக்கட்சியின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வருகிறார். இந்நிலையில் தேனியில் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காவித்துண்டு அணிந்து அந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவை நடத்தியது இந்து முன்னணி. 

இதனால், ''இவர் என்ன பாஜகவில் இணைந்துவிட்டாரா?'' என்றும், ‘’ஜெயலலிதா இருந்தால் இதுபோன்று காவி துண்டை ரவீந்திரநாத் கழுத்தில் போட்டுக் கொள்வாரா?' என்றும் அதிமுகவினர் முணு முணுக்கின்றனர்.

தனது மகனை எப்படியும் மத்திய அமைச்சர் அல்லது இணை அமைச்சர் ஆகிவிட வேண்டும் என காய் நகர்த்தினார் ஓ.பிஎஸ். ஆகையால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜகவை, குறிப்பாக பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகிறார் ரவீந்திரநாத். எப்படியும் அமைச்சர் பதவியை பெற்று விடவேண்டும் என்பதற்காகத்தான் பாஜக புகழ் பாடி வருகிறார். அதிமுக தலைமை எதிர்த்து வந்த முத்தலாக் மசோதாவை ஆதரித்து மக்களவையில் பேசினார். இதையடுத்து, சர்ச்சை கிளம்பியது. இதற்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவரை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், ரவீந்திர நாத் காவித்துண்டை அணிந்ததை அதிமுகவிற்குள் இருக்கும் அவரது எதிராளிகள் பெரிதுபடுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த விழா இந்து முன்னணி நடத்தியதால் அவர் காவித்துண்டு அணிந்து பேசினார்’ என ரவீந்திரநாத் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.