உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, நிர்வாகம் சரியில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என அடுக்கடுக்கான புகார்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, மூத்த நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பீமாராவ் லோகூர் ஆகியோர் கூறினர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 4 நீதிபதிகள் சுட்டிக் காட்டிய விவகாரங்களில் தலைமை நீதிபதி அக்கறை காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தின. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர 100 எம்பிக்களின் ஆதரவும் மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் ஆதரவும் தேவை. இதற்காக எதிர்க்கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. 

இதையடுத்து இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.