எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கியது. நேற்று அவை தொடங்கியதுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்பிக்களும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் நேற்று முழுதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதையடுத்து இரண்டாவது நாளான இன்று, அவை தொடங்குவதற்கு முன்னரே நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி சிலை முன்பு திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் தொடங்கியதும், போராட்டத்தில் ஈடுபட்ட பதாகைகளுடன் உள்ளே நுழைந்த உறுப்பினர்கள், அங்கும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதாகைகளைப் பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600 கோடி மோசடிக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் பல விஷயங்களை வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். 

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இன்றும் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால், இரண்டு நாளும் நாடாளுமன்றம் முடங்கியது.