திமுகவில் தொடரும் வாரிசு அரசியல்..! தந்தைக்கும், மகனுக்கும் பதவி கொடுக்கும் ஸ்டாலின்; அழுத்தம் காரணமா?
திமுக வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகனுக்கு அமைச்சர், எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழக ஆட்சியிலும், மத்தியிலும் பல்வேறு பொறுப்புகளிலும் திமுக மூத்த நிர்வாகிகளும் அவர்களின் வாரிசுகளும் இடம்பெற்றுள்ளனர்.
திமுகவும் தமிழக அரசியலும்
திராவிட முன்னேற்ற கழகம் 1949ஆம் ஆண்டு,செப்டம்பர் 18ம் நாள்,சென்னை,ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற கருத்து கணிப்பு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்டது. அப்போது தேர்தலில் போட்டியிடலாம் என்று 56,942 பேரும், போட்டியிட வேண்டாம் என்று 4,203 பேரும் வாக்களித்தனர்.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்டு,138 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவை கைப்பற்றிய கலைஞர் கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக தலைவராக தொடர்ந்து நீடித்து வந்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து நாசர் மட்டும் நீக்கப்பட்டது ஏன்..? வெளியான பரபரப்பு தகவல்கள்
வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக
முன்னதாக கருணாநிதி வாரிசு அரசியலை கொண்டு வருகிறார். தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என புகார் கூறி திமுகவில் இருந்து வைகோ விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை உறுதிபடுத்தும் வகையில், கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அந்த வழியில் திமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள் கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தனர். அதனை தொடர்ந்து தங்களது வாரிசுகளுக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து பதவிகளை பெற்று வருகின்றனர்.
தந்தை மகனுக்கு ஒரே நேரத்தில் பதவி
திமுகவில் மட்டும் ஒரே நேரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் முக்கிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்பட்டதை எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் திமுகவின் வாரிசுகளும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் தற்போது பார்க்கலாம்..
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவரது மகனான மு.க.ஸ்டாலினுக்கு மேயர், அமைச்சர்,துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளை வழங்கினார். தனது மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக தலைவர் பதவியை அடைந்த மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளார்.
திமுகவின் முக்கிய பொறுப்பில் வாரிசுகள்
மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது மகனான கலாநிதி வீராசாமிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொடுத்துள்ளார்.
மூத்த அமைச்சராக துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அமைச்சராகவும் சபாநாயகராகவும் இருந்த பழனிவேல் தியாகராஜனின் மறைவிற்கு பிறகு பிடிஆர் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
மந்திரியாக பதவியேற்கும் டிஆர்பி ராஜா
அமைச்சர் ஐ.பெரியசாமி தனது மகன் ஐ.பி.செந்தில்குமாரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பிராகாக்கியுள்ளார். இதே போல அமைச்சர் பொன்முடி தனது மகன் தெய்வசிகாமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும், திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவிற்கு 3 முறை எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்த நிலையில் தற்போது டிஆர்பி ராஜா அமைச்சராகவும் பதவியை பெற்றுள்ளார்.
இது போன்று திமுகவில் தங்களுக்கு மட்டுமில்லாமல் தங்களது வாரிசுகளுக்கும் கட்சியில் மட்டுமில்லாமல் ஆட்சியிலும் முக்கியத்துவம் பெறும் வகையில் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்