opposition leader stalin will meet chief minister palanisamy
போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள், நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 5 முதல் 11ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பொங்கல் நெருங்கியதை ஒட்டி அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தம் முடித்து கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஏற்கனவே போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறிய அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை காரணமாக காட்டி பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. சுமார் 50 முதல் 100% வரை கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, பொதுமக்களின் போராட்டங்களை அடுத்து சிறிய அளவில் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு மற்றும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இந்த குழு போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை நேற்று முன் தினம் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்த ஆய்வறிக்கையை முதல்வர் பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து ஸ்டாலின் வழங்க உள்ளார். அப்போது, போக்குவரத்துக்கழக சீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளது.
