opposition leader stalin blames tamilnadu government
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புகள் தொடர்பான மீட்புப்பணிகளை மேற்கொள்ள மூன்று அமைச்சர்கள், குமரி மாவட்டத்தில் முகாமிட்ட போதிலும் எந்த பயனும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கூட இல்லாத அளவிற்கு ஓகி புயலால் குமரி மாவட்டம் பேரழிவை சந்தித்துள்ளது. 1991 ம் ஆண்டு புயலால் பாதிக்கப்பட்டதைவிட தற்போது குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை இழந்து அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர். தமிழக அரசு 29ம் தேதியே முன்னெச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் உண்மை அதுவல்ல. அத்தகைய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வரவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மாயமான மீனவர்கள் 500, 1000 என சொல்லுகின்ற அளவில் அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் அரசு தரப்பில் முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. மீட்புப்பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு 25000 ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பெருமளவில் இருந்த ரப்பர் மரங்களும் வாழை மரங்களும் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றுக்கான உற்பத்தி செலவை அரசு வழங்க வேண்டும் என கோருகின்றனர்.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்குவதற்கும் இடிந்த வீடுகளை கட்டுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். 2 நாட்களில் சரியாகிவிடும் என அறிவித்தார். ஆனால், 60% பகுதிகளில் இன்னும் மின்சாரம் இல்லை.
ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவனம் செலுத்துவதை தவிர்த்து மக்களுக்கு உதவ வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அவரிடம் எடுத்துரைக்க உள்ளேன். புயல் மீட்புபணிகளை மேற்கொள்ள குமரி மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளதால், குமரி மாவட்டத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டையும் ஸ்டாலின் முன்வைத்தார்.
