நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  மதுரையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ரவி இன்று காலை உயிரிழந்தார்.

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை அறிவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. 

நடைபயணத்தை வாழ்த்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பேசினர். அப்போது கூட்டத்தில் திடீரென ஒருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். தலை, உடல் என தீப் பற்றிய நிலையில், அவர் இங்குமங்கும் ஓடினார். இதையடுத்து அவர் மீது மண்ணை போட்டும், தண்ணீர் தெளித்தும் தீயை அணைத்தனர். அப்போது அந்த இளைஞர் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் வரக்கூடாது என முழுக்கமிட்டார். உடனடியாக அவரை மீட்ட தொண்டர்கள் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

தீக்குளித்த இளைஞர் சிவகாசியைச் சேர்ந்த ரவி  என்றும், அவர் விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் செயலர் என்றும் மதிமுகவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி  மதிமுக நிர்வாகி ரவி  இன்று காலை உயிரிழந்தார்.