சட்டமன்றத்தில் எழுந்து நின்றாலே சிங்கம் போல கர்ஜிப்பார். தொலைக்காட்சியில் சில நேரங்களில் அவருடைய விவாதங்கள் நடைபெறும். எல்லாரையும் தனது வாததத்தால் அடித்து நொறுக்கிவிடுவார் என ஜெ.அன்பழகன் உருப்படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 10-ம் தேதி உயிரிழந்தார். ஜெ.அன்பழகனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே குழி தோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஜெ.அன்பழகன் படத்திறப்பை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;-  சகோதரன் ஜெ.அன்பழகன் நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். இது சென்னை மேற்கு மாவட்டத்திற்கும் மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. ஒட்டுமொத்த சென்னைக்கும் ஏற்பட்ட இழப்பாகவும் பார்க்கவில்லை. திமுகவிற்கே ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்குகே ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பாகும். முக்கியமாக தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பு. பண்முக ஆற்றல் கொண்டவராக சகோதரன் ஜெ.அன்பழகன் இருந்தார். 

சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று பேசக் கூடியவர்; மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக பேசக் கூடியவர் ஜெ.அன்பழகன். எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமர்சிப்பார். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களை பிரமாண்டமாக நடத்தியவர். ஒவ்வொரு நாளும் கழகம் தன்னால் வளர வேண்டும் என்று நினைத்து செயல்பட்டவர் ஜெ.அன்பழகன் என்று கண்ணீர் மல்க மு.க.ஸ்டாலின் பேசினார்.