ராமநாதபுரம் அருகே பெண்கள் எதிர்ப்பு காரணமாக திறக்கப்பட தயாராக இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், அருகே உள்ள தினைக்குளம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை, ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்போடு நேற்று  திறக்க முயன்றனர். அப்போது திடீரென அங்கு கூடிய சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடைக்கு முன் குவிந்தனர். அவர்கள் கடையை திறக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், கூச்சலிடும் கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். 

 அப்போது கடையை திறந்தால் அடித்து நொறுக்குவோம் என பெண்கள் ஆவேசமாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருகரம் கூப்பி கைகளை கும்பிட்டு அதிகாரிகளிடம் திறக்கக் கூடாது, திறந்தால் எங்கள் குடும்பம் நடுதெருவிற்கு வந்துவிடும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை முடிவில் மதுபானக்கடை இழுத்து மூடப்பட்டது. 

இதேபோல் நேற்று மதுரையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை திறக்கவும் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கடைமுன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.