O.panneerselvam meet His supporters at Theni

‘இப்பதேன் மனசுக்கு சித்த தெம்பா இருக்குதுப்பே! கெளம்பிட்டேம், விசுக்குன்னு வந்துடுதேம்!’ தன் பாக்கெட்டிலிருந்த சிறிய மொபைலில், பெரிய குளத்துக்கு ஒரு போனை போட்டு சொல்லியபடியே கிளம்பினார் பன்னீர் செல்வம். 

பிள்ளையார் பிடிக்கப்போயி குரங்கான ஸ்டோரியாக ஏதேதோ கற்பனையுடன் ஆரம்பமான பன்னீர் செல்வத்தின் ஏகபோக மக்கள் செல்வாக்கு எடக்குமடக்காக சரிந்திருக்கிறது. இதன் விளைவால் மனம் மற்றும் உடலளவில் பெரும் சோர்வுக்கு ஆளானார். விளைவும், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கிட்டா சரியாகிடும்ணே! என்று ஊர்க்காரர்கள் சிலர் அட்வைஸ் மழை பொழிய, கோவையிலிருக்கும் ஆர்யவைத்திய சாலையில் மூன்று நாட்கள் புத்துணர்வு சிகிச்சையில் கலந்து கொண்டார் பன்னீர். 

அங்கே அவரை எண்ணெய் குளியல், பத்திய உணவு, சூரணங்களில் ஆரம்பித்து சுக்கு காஃபி வரை என முழு டயட்டில் வைத்தத்தோடு கேரள ஸ்டைல் ஸ்பெஷல் மசாஜ்களிலும் முக்கியெடுத்துவிட்டனர். அமைச்சராக, முதல்வராக எத்தனையோ முகாம்களை துவக்கிவைத்த பன்னீரை இந்த புத்துணர்வு முகாம் பெண்டு கழற்றிவிட்டது. ஆனாலும் மூன்று நாட்கள் கர்ண சிரத்தையாக டெடிக்கேட் செய்ததில் செம புத்துணர்வுடன் ரெடியானார் பன்னீர். 

முகாம் முடிந்து ஞாயிறு காலை சிகிச்சை மையத்திலிருந்து வெளியே வந்த பன்னீரை அவரது ஆதரவாளர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு வரவேற்றது. 
அதன் பிறகு பெரியகுளம் நோக்கி கிளம்பியவர் ஆன் தி வேயில் பல கோயில்களில் ஆஜர் போட்டதுதான் ஆச்சரியம். கோவை சிட்டியின் எல்லையிலிருக்கும் ஈச்சனாரி கோவிலுக்கு சென்றவரை கோவை மாவட்டத்தில் அவரது ஆதரவாளரான ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கவர் செய்து உள்ளே அழைத்துச் என்றார். அதன் பிறகு பொள்ளாச்சி செல்லும் வழியில் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற பன்னீரை, கிணத்துக்கடவின் முன்னாள் அமைச்சர் தாமோதரன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

அதேபோல் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றபோது பொள்ளாச்சியிலிருக்கும் பன்னீர் டீமும், தீபா பேரவையை சேர்ந்த சிலரும் அழைத்துச் சென்று ஆராதனையில் கலக்க வைத்தனர். அப்படியே உடுமலை தாண்டி பழனி சென்றவர் கோவணாண்டி முருகனுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டே பெரியகுளத்துக்கு கிளம்பினார். 

பன்னீர் இப்படி கோயில் கோயிலாய் ஏறி இறங்குவது அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவர, பழனி டு பெரிய குளம் ரூட்டில் உள்ள பல கோயில்களின் பூசாரிகளை உசுப்பிவிட்டு ‘அண்ணே இங்கன வருவாக. அர்ச்சனை ரொம்ப தூக்கலா இருக்கணும்’ என்று ரெடி பண்ணி வைத்திருந்தனர். இன்னும் போக வேண்டிய கோயில்களின் லிஸ்டை கேட்ட பன்னீருக்கு தலை சுற்றிவிட்டது. 

இப்போதைக்கு இவ்வளவு போதும், நான் ஊருக்கு கெளம்புறேம் ...என்றபடி பெரியகுளத்துக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். 

ஊரில் வரவேற்பு நடந்தபோது ’யண்ணே ச்சும்மா பளிச்சுனு இருக்கீக! எம்.ஜி.ஆர். சித்த கறுப்பா இருந்திருந்தா உங்கள மாதிரிதான் இருந்திப்பாவ’ என்று உற்சாக குரல் கொடுத்த தேனி தொண்டன் ஒருவரை பதைபதைப்போடு உஸ்ஸ்ஸ்...! என்று சொல்லி அமைதிப்படுத்தினார் பன்னீர்.

அந்த பதற்றம் தணியாமல் உள்ளே சென்றவர் ‘புரட்சித்தலைவரோட எல்லாம் என்னைய சம்பந்தப்படுத்தி பேசி சோலிய முடிச்சுப்போடாதீக. நம்மாளுங்கள கொஞ்சம் அடக்கி வாசிக்கச்சொல்லுப்பே!’ என்று சொந்தங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். 

புத்துணர்வு முகாம் முடித்த பன்னீரின் அடுத்த ரவுண்டு அரசியல் எப்படி இருக்குமென்று பொறுத்திருந்து பார்ப்போம்!