ஒரே ஒரு ட்விட் போட்டு சிறு ஜவுளி வியாபாரியை இரண்டே நாட்களில் லட்சக்கணக்கில் ரூபாய் குவியும் அளவுக்கு ஹெச்.ராஜா போட்ட கருத்து உயர்த்தியுள்ளது. 

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், தேசிய கைத்தறி நெசவு பயிற்சியாளருமான காரப்பன், கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில் இந்துக் கடவுள்கள் குறித்தும் உயர்சாதியினர் குறித்தும் பேசிய கருத்து கடுமையான விவாதத்திற்குள்ளானது.

இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஊர்முழுக்க ஒட்டினர். காரப்பன் சில்க்ஸ் கடையில் இந்துக்கள் யாரும் துணிவாங்க வேண்டாம் என்கிற ரீதியில் பரப்புரை மேற்கொண்டனர். இதையடுத்து, காரப்பன், இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனால், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுக்க தீயாகப் பரவியது. பா.ஜ.க-வினரின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வெளியூர்களைச் சேர்ந்த பலரும் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்துக்குச் சென்று துணிவாங்க வேண்டும் என தமது விருப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பலரும், அங்கு சென்று தீபாவளிக்கு துணி வாங்கி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

Scroll to load tweet…

கடை முதலாளியின் கருத்துக்காக கடையின் வியாபரத்தைத் தடுத்து, பொருளாதார ரீதியாக முடக்க நினைத்த பா.ஜ.க-வினரின் திட்டத்தை எதிர்த்து, பலரும் ஆதரவு தெரிவித்து வியாபாரத்தைப் பெருகச் செய்துள்ளனர். இதுகுறித்து ஊடக நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள காரப்பன், “அறிமுகம் இல்லாதவர்கள் கூட எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

Scroll to load tweet…

சிறுமுகையில் உள்ள அனைத்துக் கடைகளிலுமே வியாபாரம் அதிகரித்துள்ளது. பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.