எல்ஐசி பங்குகளை மோடி அரசு விற்பனை செய்ய இருப்பது வெட்கக் கேடானது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் 25 சதவீத பங்குகளை விற்கும் மோடி அரசின் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு என்று சொல்லி கவர்மெண்ட் கம்பெனி sell government company என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.

நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை ஈடு கட்டுவதற்கு என்று அரசு துறை நிறுவனங்களை விற்று வருகிறது. இது மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை சிக்கலுக்கு உள்ளாகும், மேலும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்கும் முயற்சி வெட்கக்கேடானது என தனது ட்விட்டரில் அவர் கண்டித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 52. 98 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவையும் இரண்டு நாட்களுக்கு முன் ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். 

தனியார்மயமாக்குவதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமின்றி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும் மோடி அரசு அழிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இன்று இந்த நாடு மோடி அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு பேரழிவுகளை சந்தித்து வருகிறது, இதில் தேவையில்லாத இந்த தனியார்மயமாக்கலும் ஒன்று இந்த தனியார்மயமாக்கலால் யார் பயன்பெறுவார்கள், மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே இதனால் பயன் அடைவார்கள் என்று அதில் கூறியிருந்த ராகுல்காந்தி, தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம். அரசு வேலைவாய்ப்பை பாதுகாப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.