கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு சில மணி நேரங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதாகவும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே மொபைல் போன், டிவி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து இந்த ஆன்லைன் வகுப்புகளை பார்த்து பாடங்களை படித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், எனவே ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன.

ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற, கிராமப்புற மற்றும் ஏழை –பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவிகள் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த என்னென்ன விதிமுறைகள் கொண்டுவரப்படும்? என்பது குறித்து இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்