தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர், அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும், முதல்வராக வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர் தமிழருவி மணியன். இவர் ரஜினிகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவ்வபோது பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால், சில நாட்களாக ரஜினிகாந்துக்கு இவர் அளித்து வந்த ஆதரவில் விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை தமிழருவி மணியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டியளிக்கையில்;- என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும். ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்;- தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர், அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது என விமர்சனம் செய்துள்ளார். மேலும், அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை. சசிகலா வந்தவுடன் அமமுக - அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.