முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 2 வது கொரோனா அலை உச்சபட்சத்தில் இருந்தது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதனை திறம்பட எதிர்கொண்டு மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முக்கிய காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தார் என்றால் அது மிகையாகாது...
ஆக்சிஜன் இல்லாமல் தவித்த மக்கள்
கொரோனா பாதிப்பின் கொடூர முகம் என்னவென்றால் இரண்டாம் அலையை கூறலாம்..அந்தஅளவிற்கு மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். தங்களது சொந்தங்களை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் பரிதவித்தனர். சொந்தங்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிர் காத்திட ஆக்சிஜன் வசதி கிடைத்து விடாதா என ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து கொண்டிருந்த நேரம்.. அதே நேரத்தில் தான் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று ஆட்சி அதிகாரத்தை பிடித்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, வெற்றி அறிவிப்பு வந்து கொண்டிருந்த அந்த மாலை வேளையில் முதலமைச்சரை சந்திக்க வந்த அதிகாரிகளோடு தனது முதல் ஆலோசனை கூட்டமாக நடத்தியது கொரோனா கட்டுப்பாடு பற்றி தான்... 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக வெற்றி கொண்டாட்டத்திற்கு தடை விதித்து பதவியேற்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்தியது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

ஆக்சிஜனாக வந்து உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்
பதவியேற்பதற்கு முன்பே இரண்டு மூன்று முறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி கொரோனா கட்டுப்பாடுகள், மருத்துவமனையில் உள்ள வசதிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என அனைத்தையும் திறம்பட கையாண்டார் ஸ்டாலின், இதனையடுத்து பதவியேற்ற அன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு உடனடியாக ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார். மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு வழிமுறைகளையும் வகுத்தார். கொரோனா காலக்கட்டத்தில் முதலமைச்சர் அதிரடியாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டதால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற ஒரே ஆண்டில் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்,

* கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்,
* தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை போர்க்கால அடிப்படையில் பெற்று, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சரிசெய்தார்...
* வர்த்தக மையம் உள்ளிட்ட பல அரசுக் கட்டடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, படுக்கை வசதிகளை அதிகப்படுத்தினார்.
* பேரிடர் நேரத்தில் மக்களின் கையில் ரொக்கப் பணம் இருக்க வேண்டும் என்பதைப் கருத்தில்கொண்டு, 4,000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதி வழங்கினார்.
* கொரோனா தொடர்பான மருத்துவத் தேவைகளை ஒருங்கிணைக்க முக்கிய மாவட்டங்களில் `வார் ரூம்’ திறந்தார். அந்த வார் ரூமுக்கு நேரில் சென்று பணிகள் சரியாக நடப்பதையும் முதலமைச்சர் உறுதி செய்தார்.
* கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் பல்லாயிரக்கணக்கில் பணம் பெற்றுவந்த சூழலில், `தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும்’ என்று உத்தரவிட்டார்.
* இரவு பகல் பாராமல் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். இதனால் அவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை, இழப்பீடுகள் ஆகிய பலன்கள் கிடைத்தன..
* கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்கள், காவலர்கள் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்தார்.
* கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை அரசு ஏற்கும் என தெரிவித்தார்.
* ஊரடங்கு காலத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கினார். அந்தப் பொருள்கள் தரமாகக் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
* வேலை அதிகரிப்பால் விரக்தியில் இருந்த செவிலியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளித்தார்.
* முக்கியமான தருணத்தில், தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 1,220 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.அவர்களின் ஊதியத்தையும் 15,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாயாக உயர்த்தினார்.
* மருத்துவமனையில் படுக்கை வசதிகளை மேம்படுத்தினார்..தொடர் கண்காணிப்பு மேற்கொண்டார்.
* தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி அனைவரும் தடுப்பூசி செலுத்த தொடர் விழிப்புணர்வு வழங்கி வருகிறார்..
இது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா தற்போது 25 முதல் 50 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பணி தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
