முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !
MK Stalin Govt: கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் புதிய அரசுகள் அமைந்து ஓராண்டை கடந்த நிலையில், அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் ஆய்வு ஒன்றை நடத்தியது. தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமரின் செயல்பாடு ஆகியவை தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும், 44% பேர் திருப்தியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 85% பேர் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 17%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 30% பேரும் திருப்தி அளிப்பதாக 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் 13%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேர் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக 10% பேர் மட்டுமே கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை.
தமிழகத்தில் 17% பேர்தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாகவும் கூறியுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் பிரதமராக மோடியே நீடிக்க 32% பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.