மத்திய அரசு செய்துவிட்டது.. இந்த திராவிட மாடல் செய்யுமா ? திமுகவை வம்புக்கு இழுக்கும் எச்.ராஜா
H Raja Tweet : பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து அவற்றின் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சமீப காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாயை கடந்தும் டீசல் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தும் விற்பனையானது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
விலைவாசியும் கடுமையாக உயர்ந்தது, எனவே எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு சமையல் கேஸ் ஒன்றுக்கு ரூ.200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசு செய்துவிட்டது. இந்த திராவிட மாடல் செய்யுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்களையும், இதேபோன்ற வரிக் குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.