மசூதி கட்ட நிலம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இஸ்லாமிய மக்களுக்கு  சீக்கியர் ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம்   புர்காசி பகுதியை சேர்ந்தவர்  சுக்பால் சிங் பேடி,  இவர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் ஆவார். 

அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இந்நிலையில் சீக்கியர்களின் குருவான குருநானக் கின் 150-ஆவது பிறந்தநாள் விழா சீக்கியர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது .  இந்நிலையில் இந்த மாதம் முழுவதும் மற்றவர்களுக்கு உதவிகளை செய்து மகிழ்வது சீக்கியர்களின் பழக்கம்.  அந்தவகையில் அப்பகுதி முஸ்லிம் மக்கள் நீண்ட நாட்களாக மசூதி கட்ட பல முயற்சிகளை  எடுத்து வருகின்றனர்,  ஆனால் அவர்களிடம் நிலம் இல்லாததால் மசூதி கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதைக்கண்ட  70 வயதான  பால்சிங் தன்னிடம் இருந்த 900 சதுர அடி நிலத்தை முஸ்லிம் மக்களுக்கு மசூதி கட்ட தானமாக வழங்கியுள்ளார். 

 

இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  இந்தியாவில் உள்ள மக்கள் சகோதரத்துவத்துடன் இருக்கவேண்டும்,  மதநல்லிணக்கத்தை  பாதுகாக்கும் வகையில் தங்களின் புனித நாளாக நாங்கள் கருதும்  குருநானக்கின் பிறந்த நாளில்  இந்த நல்ல காரியத்தை செய்வதில் மகிழ்ச்சி  அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.  சுக்பால் சிங்கின் இந்த செயலை அனைத்து மதத்தினரும் பாராட்டி வருகின்றனர். சுக்பால் சிங்குக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.