குடும்ப உறுப்பினர்கள் கை விட்டதால் முதியவர் ஒருவரின் சடலத்தை அனாதை பிணமாக குப்பை வண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ராஜாராம் கூலி தொழிலாளி வயதாகிவிட்டதால் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்டு சோளிங்கர் பகுதியிலேயே பிச்சை எடுத்து வயிற்றை கழுவி வந்தார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி மரணமடைந்ததை அடுத்து. யாரும் அவரது உடலை வாங்க வராததால் அனாதை பிணமாக வழக்கு எடுத்துக்கொண்ட சோளிங்கர் காவல் துறையினர். அந்த முதியோர் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.

அதனையடுத்து முதியோரை தேடி சோளிங்கர் காவல் நிலையத்திற்கு வந்த குடும்ப உறுப்பினர்கள் ராஜாராம் உடலை அடக்கம் செய்ய வசதி இல்லையென்று ஆகையால் அனாதை பிணமாக கருதி அடக்கம் செய்யும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்போடு குப்பை அள்ளும் வண்டியில்  திறந்த நிலையில் அந்த முதியோரின் சடலத்தை வெள்ளை துணியால் கட்டி சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து சுடுகாடு வரை கொண்டு சென்றதை கண்ட மக்கள் கண்ணீரோடு பார்த்து மனமுடைந்துள்ளனர். மேலும் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.