கடந்த சில மாதங்களாகவே தாறுமாறான உறக்கத்திலிருந்த பேபிம்மாவை யார் உசுப்பி எழுப்பினார்களோ தெரியவில்லை, எழுந்த வேகத்தில் தன் ஆல் இன் ஆல் ஆஸ்தான நண்பன் ஆயில் ராஜாவை துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார் கட்சியிலிருந்து. (அதை கட்சியான்னு கேட்காதீங்க! இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாத மாதிரிதான்! ஆனாலும் வேற வழியில்லை).

அம்மா பேர்ல கட்சி வச்சிருக்கி தலைவருங்க அத்தனை பேரும் மாநாடு, முப்பெரும் விழான்னு மாவட்டம் மாவட்டமா டூர் போறாங்களே, நானும் போனா என்ன? அப்படின்னு தன் பேரவை சார்பாக சில மாவட்டங்களில் டூர் அறிவிச்சுது பேபிம்மா.  ஒரு ஊருக்கு கட்சி நிகழ்ச்சிக்கு போனா காலங்காத்தால குளிச்சு முழுகி, நறுக்குன்னு ஒரு சேலையை கட்டி நாலு எடத்துல போயி கொடியேத்தணும், குத்துவிளக்கேத்தணும். ஆனா பேபியோ லஞ்ச் டைம் முடியுற வரைக்கும் தலைகுப்புற தலகாணியில விழுந்து தூங்கிட்டு, நாலரை மணிக்கு எந்திரிச்சு குட்மார்னிங் சொன்னாக்க, நிர்வாகிகளுக்கு டென்ஷன் கட்டி ஏறுமா ஏறாதா?

மாலை ஆறு மணி பொதுக்கூட்டத்துக்கு ஏழு மணிக்கு வந்தாலும் கூட பரவாயில்ல ஆனா நைட்டு ஒன்பது மணிக்கே வந்துடுறது என்ன பழக்கம்? வூட்டுல பொண்டாட்டி தொல்லை தாங்காம வீதிக்கு ஓடி வந்தவன், ஒரு எண்டெர்டெயின்மெண்டுக்காக மேடை முன்னாடி நாடி வந்தவனெல்லாம், வைதேகி காத்திருந்தாள் வெள்ளச்சாமியாட்டமா ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகதம்மா எங்க பேபிம்மா!’ன்னு குரூர ராகத்துல பாடி கொலையா கொல்லுற லெவலுக்கா பொதுக்கூட்டம் நடத்துறது?

இது எதுவும் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டுதான் வூடே கதின்னு பேபிம்மா ரெஸ்டு மேலே ரெஸ்ட் எடுத்து டயர்டாச்சு. ஆனா பாவம் அந்த பச்ச புள்ள ஒரு பன்னெண்டு மணி நேரம் கூட தூங்குறது பொறுக்காம, எவனோ ‘தலைவீ! இந்த ஆயில் ராசா தொல்ல தாங்க முடியல’ என்று கூப்பாடு போட்டு வைக்க, நித்திரை கலைந்து ‘ஏன்டா கத்துற?’ என்றபடி எழுந்த பேபிம்மா, லெட்டர் பேடை எடுத்து அடிச்சுது பாருங்க ஒரு டிஸ்மிஸ் ஆர்டர்! அம்மாடியோவ் ஆயிரம் இடிகளும், ஐந்தாயிரம் மின்னல்களும் ஒண்ணா சேர்ந்து ஓலக்கம் வெச்சா மாதிரி ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை அது. 
அந்த ஆர்டர்ல பேபிம்மா அப்டி இன்னாதான் உத்தரவு போட்டிருக்குது?...

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெ.,தீபா அணி) மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் கழகத்திலிருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் A.V. ராஜா அவர்கள் விடுவிக்கப்படுகிறார். அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கழக கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” அப்படின்னு கட் அண்டு ரைட்டா சொல்லி, பொதுச்செயலாளர் தீபா-ம்மா கையெழுத்தும் போட்டிருக்காங்க அக்காங்!

ராஜாவோட சமீபத்திய நடவடிக்கைகள் கட்சிக்கு (அவ்வ்வ்...) களங்கத்தை தர்றதாலேதான் இந்த நடவடிக்கையாம். 
சர்வதேச ஈர்ப்புடைய ஒரு அரசியல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால்  ஆயில் ராஜா...

‘நான் இனி எங்கே போவேன்? எனக்கு யார தெரியும்?’ என்று கெளரவம் பட சிவாஜியாட்டமா தெறித்து தெருவில் நிற்கிறாராம். 
ஹும்! தமிழக அரசியலுக்கு வந்த சோதனை.