கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நற்கருணை வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டது. 

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் வழிபாட்டு நடைமுறைகளில் உள்ள நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற ஒருவரை ஒருவர் தொடக்கூடிய அம்சங்களை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அவர்களின்  வழிபாட்டில் நற்கருணை முக்கிய பங்காக இருப்பதால் அதை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து அரசு அதனை ஏற்று வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றம் செய்துள்ளது, இதனடிப்படையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நிபந்தனையுடன் நற்கருணை அனுமதிக்கப்படுகிறது. அந்த நிபந்தனையின்படி நற்கருணையின் போது வழங்கப்படும் அப்பம் மற்றும் திராட்சை ரசம் ஆகியவை ஒவ்வொரு பக்தர்களுக்கும் தனித்தனி கப்புகளில் வழங்கப்பட வேண்டும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.