அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா  நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வந்துவிட்டால் அண்ணன் என்ன, தம்பி என்ன எல்லாரும் தலைமைக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்பதற்கேற்ப தற்போது அதிமுகவில் நடந்து வருகிறது.மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது மீறினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளை எச்சரித்தனர். ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நாள்முதல் தற்போது வரை அதிமுகவினர் ஒவ்வொருவராக சசிகலாவை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். அதிமுக தலைமையும் சசிகலாவை சந்தித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சசிகலாவை சந்திந்த அதிமுகவில் பொறுப்பில் இருந்த பல 'தலை'கள் சிக்கினார்கள். அதிமுக தலைமையும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது நடந்த சம்பவம் பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் இந்த முறை சசிகலாவை சந்தித்தது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஒ.ராஜா. இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா காலாகாலத்துல ஒண்ணு கூடி திமுகவை எதிர்க்கலாம் வாங்கய்யா என்ற ரீதியில் தான் ஒ.ராஜா இந்த சந்திப்பை நிகழ்த்தியிருப்பார். ஆனால் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருந்த ஒபிஎஸ் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அது உடன் பிறந்த தம்பியே ஆனாலும் தப்பு தப்பு தான் என்றபடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி விட்டார். இது அதிமுகவினரை மட்டுமல்ல எதிர்கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

நேற்று திருச்செந்தூரில் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதால் இன்று அதிமுகவிலிருந்து ஓ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். தன்னை நீக்கிய கட்சித் தலைமையை எதிர்த்து ஓ.ராஜா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்னது ஒபிஎஸ் தம்பி ஒ.ராஜா பேட்டி கொடுத்துள்ளாரா என புருவங்களை உயர்த்த வேண்டாம். அந்த பேட்டியில் ஜெயலலிதா மறைவிற்கு பின் நான்கு ஆண்டுகளில் கட்சியின் படுதோல்விக்கு ஓபிஎஸ் இபிஎஸ் தான் காரணம், சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும், 
 தன்னை நீக்குவதற்கு இருவருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறியிருப்பது தான் அதிமுகவில் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் சசிகலா தலைமை ஏற்று கட்சியை வழி நடத்தினால் மட்டுமே மீண்டும் கட்சி வலிமை பெறும்.. இனிவரும் தேர்தல்களில் வெற்றி அடையும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருந்து வரும் நிலையில் தன்னை நீக்குவதற்கு ஒபிஎஸ், இபிஎஸ் இவர்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் , மேலும் அதிமுகவை வழிநடத்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும் அதற்கு நான் முழு ஆதரவு தருவேன் என்றும் சசிகலாவை நேரில் சந்தித்து தான் ஆதரவு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் கட்சியில் நடந்த நிகழ்வுகளை விளக்கிக் கூறி கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஆதரவாளர்களுடன் சென்று தெரிவித்ததாகவும் தான் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக சென்று சசிகலாவை சந்தித்ததாக தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.