Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் இல்லை… மக்களை வஞ்சிக்கும் திமுக… வறுத்தெடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்  என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

o.panneerselvam statement about pongal parisu
Author
Tamilnadu, First Published Nov 18, 2021, 1:42 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் திருநாளையொட்டி நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்ற சூழ்நிலையில், இன்று நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது என்றாலும் , 2020 ஆண்டிலிருந்து நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது . 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதற்கென 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதற்கென 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவியை கைவிட்டுவிட்டது.

o.panneerselvam statement about pongal parisu

நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் சொல்லாததையும் செய்வோம் என்பது போலும். இதன் மூலம் சென்ற ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு அளிக்கப்பட்ட 5,604 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தற்போது வெறும் 1,088 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டது. கொரோனா தொற்று என்ற உயிர்க்கொல்லி நோய் வருவதற்கு முன்பு, நாட்டின் பொருளாதாரம் ஓரளவு நல்ல நிலையில் இருந்தபோதே, 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய நிதி உதவியினை அறிவித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இந்த நிதி உதவி 2021 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளின் போது மேலும் அதிகரிக்கப்பட்டது. அதே சமயத்தில், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாக அதிகரித்து , இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

o.panneerselvam statement about pongal parisu

இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் வேலையின்றி தவிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்ட பின் தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்படுகின்ற நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பதே ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது . புதிதாக எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற திட்டத்தையாவது தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழையெளிய மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios