மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் ஓ.பன்னீர் செல்வம்- சேகர்ரெட்டி ஆட்கள் தாகக்கியதாக முகிலன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி அளித்த பாலியல் புகாரின் முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முகிலனுடன் மணல் கடத்தல் எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களில் இணைந்து செயல்பட்டவரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான கரூர் மாவட்டம் புன்செய் புகழூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய முகிலன், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அரவக்குறிச்சி போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று முகிலனை போலீசார் ஆஜர் படுத்தினர். இதற்காக கரூர் கோர்ட்டுக்கு வேனில் வந்த முகிலனை அவரது மனைவி சந்தித்து பேசினார். பின்னர் முகிலன் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். பின்னர் பேசிய அவர், ’’மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதால் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது நடவடிக்கையால் கோம்புபாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி வரை ஒரு கை மணல் கூட எடுக்க முடியவில்லை.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலை ஆவணங்களுடன் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதை தடுக்கும் வகையில் விஸ்வநாதனை கைது செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு கடம்பங்குறிச்சியில் மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும், விஸ்வநாதனையும் சேகர்ரெட்டி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் போலீஸாரின் கண்முன்னே எங்களை தாக்கினர்.

எங்களை தாக்கியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் தைரியமாக இருந்து கொலைகளை செய்கின்றனர். முதலைப்பட்டியில் தந்தை -மகன் கொலைக்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம்’’ என அவர் குற்றம்சாட்டினார்.