சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், நடிகரும் மற்றும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசினார். முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும், இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார்.

அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார். இதுதொடர்பாக, 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே, இன்று அதிகாலை சாலிகிராமம் வீட்டில் கருணாசை காவல் துறையினர் அலேக்காக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு தூக்கி சென்று வைத்துள்ளனர்.

அவர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மறுநாளில் இருந்தே கருணாசை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். அவர் கைது செய்யப்படுவார் என்பதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் ஆதரவாளர்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றி குழுமியிருந்தனர்.

ஆனாலும் இன்று அதிகாலை அவரது வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் அவரை நுங்கம்பாக்கம் ஸ்டேஷனுக்கு  அள்ளிச் சென்றனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அவர் எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.