Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியும் இந்தி பேரினவாதத்தை தான் பேசுகிறது - சீமான் ஆவேசம்

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால்  தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது. நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ntk chief coordinator seeman condemns india alliance meeting vel
Author
First Published Dec 21, 2023, 7:27 PM IST | Last Updated Dec 21, 2023, 7:27 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் 19.12.2023 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நான்காவது கலந்தாய்வுக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களின் கோரிக்கையை ஆணவத்துடன் நிதிஷ்குமார் நிராகரித்ததோடு, இந்த நாடு இந்துஸ்தானம் என்றும், தேசிய மொழி இந்தி என்றும் கூறியுள்ளது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானதாகும். நிதிஷ்குமாரின் அக்கருத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைதி காத்தது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஊழல் அமைச்சர்களுக்கு உதவி செய்யும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை

இந்தியா பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒன்றியம் என்றே இந்திய அரசியலமைப்புக் கூறுகிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றோ, இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தமானது என்றோ அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை. இந்தியாவிலிருந்தால் இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிதிஷ்குமாரின் பேச்சு, இந்தி பேசாத தேசிய இன மக்கள் மீது காலங்காலமாக வட இந்திய தலைவர்கள் உமிழும் வெறுப்புணர்வின் வெளிப்பாடேயாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்திய ஒன்றிய அரசில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து, நாட்டினை ஒற்றை மயமாக்கும் நோக்குடன் செயல்படும் பாஜகவின் பத்தாண்டு கால அரசின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணியும், பாஜகவைப் போலவே இந்தி பேரினவாத மனப்பான்மையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது. பாஜகவின் இந்துத்துவக் கோட்பாட்டினைப் போலவே, இந்தியா கூட்டணியின் இந்தித்துவக் கோட்பாடும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதோடு, பிரிவினைக்கே வழிவகுக்கும். மாநில உரிமைகளைப் பறிக்கும் மதவாத பாஜக கூட்டணிக்கு மாற்று இந்தியா கூட்டணி என்பது ஏமாற்றுவேலை என்பது தொடக்கத்திலேயே அம்பலப்பட்டுள்ளது. 

கும்கி கொம்பன் ஸ்டைலில் ரீ எண்ட்ரி கொடுத்த சுருளி கொம்பன்; வனத்துறையினர் அலர்ட்

பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் நாட்டில், அடிப்படை மொழி உரிமையைக் கூட ஏற்க மறுக்கும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒன்றுகூடி மாநில உரிமைகளை மீட்டுத் தருவார்கள் என்பது வேடிக்கையானது. நிதிஷ்குமாரின் கருத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்ற வட மாநில முதல்வர்களைப் போலவே தமிழ்நாடு முதல்வரும் அமைதி காத்தது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த வாரம் வெளிவந்த மும்பை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் இந்தி திணிப்பு பேச்சிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த ஐயா ஸ்டாலின் அவர்கள், அதைவிட  பன்மடங்கு வலிமையான நிதிஷ்குமாரின் கருத்திற்கு இன்றுவரை எவ்வித  எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்? இதுதான் மாநில தன்னாட்சியை திமுக காக்கும் முறையா? தேர்தல் கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வைக்கூட அடகு வைத்துள்ள திமுகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. கூட்டணி கூட்டத்தில் குறைந்தபட்ச மொழி உரிமையைக் கூட காக்கத் திறனற்றவர்கள், ஆட்சி அதிகாரத்தை அடைந்து மாநில உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்பதை எப்படி நம்பமுடியும்? நீட் தேர்வு ரத்து, நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடும் உரிமை உள்ளிட்டவற்றில் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஆகவே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்றும்  நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios