தமிழகம் முழுவதும் இருக்கும் ஏரிக்கரையோரங்களில் பனை விதைகளை நட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 'பனைத் திருவிழா' என்கிற பெயரில் இன்று அந்த நிகழ்வு நடந்து வருகிறது.

சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் நாராயணபுரம் ஏரிக்கரையில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பனை விதையை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பலர் ஏரிக்கரை ஓரங்களில் பனை விதையை நட்டு வைத்தனர்.

இந்த நிகழ்வில் இன்று காலை திருமணமான சந்தோஷ்- மஞ்சு ரேகா தம்பதியினர் கலந்து கொண்டு பனை விதையை நட்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் இருக்கும் அக்கட்சியை சார்ந்தவர்கள், அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏரிக்கரைகளில் பனை விதையை நட்டு வருகின்றனர். பலகோடி பனை திட்டத்தின் முன்னெடுப்பாக இன்று ஒரே நாளில் பத்து லட்சம் பனை விதைகள் நட இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சீமான், பனை மரம் தமிழர்களின் தேசிய மரமாக இருப்பதாகவும் அது மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை வளப்படுத்துவதாக கூறினார். பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்வதாக குறிப்பிட்டார்.

மேலும் சந்திராயன் 2 குறித்து பேசிய அவர், இதை தோல்வியாக கருத தேவை இல்லை என்றும் இந்த முயற்சியே நம் விஞ்ஞானிகளுக்கு வெற்றி தான் என தெரிவித்தார்.