அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியலில் விடுபட்ட 19 லட்சம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்துக்கள். அசாம் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்ட தேசிய குடியுரிமைப் பதிவேடு, மேற்கு வங்கத்திலும் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கொல்கத்தாவில் தொழிற்சங்கக் கூட்டம் ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

''மேற்கு வங்கத்தில் ஒருபோதும் என்ஆர்சி பின்பற்றப்படாது. என்ஆர்சி கொண்டுவரப்படலாம் என்ற அச்சத்திலேயே இதுவரை 6 பேர் உயிரிழந்துவி்ட்டார்கள். இனிமேல் எங்கள் மாநிலத்தில் கொண்டுவர அனுமதிக்கமாட்டோம்.

என்ஆர்சி நாட்டில் வேறு எங்கும் பின்பற்றப்படாது. அசாம் மாநிலத்தில் பின்பற்றுவதற்கு மட்டுமே சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், என்ஆர்சி மூலம் மாநிலங்களில் பாஜக பதற்றமான சூழலையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்கி வருவது வெட்கக்கேடு. ஜனநாயக மதிப்புகளை பாஜக குறைத்து மதிப்பிடலாம்,  ஆனால், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை ஆகியவை குறித்து பாஜக பேசுவதில்லை. ஆனால், தன்னுடைய அரசியல் லாபத்துக்கான விஷயங்களை மட்டுமே பாஜக பேசி வருகிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.