நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதேபோல் தமிழகத்தில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்யும், தனது படங்களின் மூலம் தொடர்ந்து அரசியல் கருத்துகளை கூறி வருவதுடன், விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, நடிகர் ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்டோர் அரசிலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரில், நடிகர் விஜய்யுடன், அண்ணாவும், பெரியாரும் இருப்பது போல் ஒட்டப்பட்டது. இதேபோல்,  நடிகர் விஜயுடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசுவது போல் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் விஜயையை எம்.ஜி.ஆர். போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து, மதுரையில் ரசிகர்கள் ஒட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து மதுரையின் பல்வேறு பகுதியில் காவி உடையில் நடிகர் விஜய் சுவாமி விவேகானந்தருடன் இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

2021 சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியை ஆரம்பிக்காமல் உள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு செல்ல கூடிய வழியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால் அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!. இப்போ இல்லை என்றால் எப்போவுமே இல்லை என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த், விரைவில் கட்சி தொங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.