கடந்த ஏப்ரலில் நடைபெறற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை விட 3, 47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 இன் படி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக வாக்காளர் வழக்கு தொடர உரிமையுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் குடிமகனான அவரது கணவர் அரவிந்தனின் வருமானம் குறித்து குறிப்பிடவில்லை.

வேட்பாளர்களைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்பாளர் கனிமொழி தனது கணவரின் வருமானத்தை மறைத்தது தவறு. எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையையும் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.