பிக்பாஸ் நிகழ்ச்சியில், சேரி பிஹேவியர் என்று கூறியதற்கு, தனியார் தொலைக்காட்சி, நடிகர் கமல் ஹாசன், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் உள்ளிட்ட பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமின் பேச்சு உடன் இருப்பவர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம் தன் சக போட்டியாளர் ஒருவரை பார்த்து 'சேரி பிஹேவியர்' என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசுயல் கட்சி தலைவர்களும் காயத்ரியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாக  தனியார் தொலைக்காட்சி, நடிகர் கமல் ஹாசன், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"நோட்டீஸ் தொடர்பாக 7 நாட்களுக்குள் முறையாக பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வழக்கு தொடரப்படும்" என்று தெரிவித்தார்.

யாரும், யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில், நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.