இந்நிலையில்தான் இந்தியா நியூஸ் ஜன்கி பாத் செய்தி நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில்  காங்கிரசுடன் குறைந்த வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கணித்துள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என இந்தியா நியூஸ் ஜன்கி பாத் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரசுக்கும் பாஜகவுக்குமான வெற்றி வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரியவந்துள்ளது. அதாவது பாஜக 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் 38 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் உத்தரகாண்ட், கோவா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் இந்த 5 மாநில தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு மேலோங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் நேரடியாக மோதிக் கொள்ளும் தேர்தல் காலமாக உத்தரகாண்ட் களம் உள்ளது.

70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் 57 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அங்கு பாஜக ஆட்சி கைப்பற்றி அது நடந்து வருகிறது. இதே நேரத்தில் இந்த முறை எப்படியாவது அங்கு அட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வகுத்து வருகிறார். எனவே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு உத்தரகாண்டில் காங்கிரஸ் பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவுகிறது. ஆனால் இரண்டு கட்சிகளுமே கோஷ்டி பூசல், கட்சித் தாவல்கள், அதிகாரப் போட்டி போன்றவற்றால் தவித்து வருகின்றன. ஆனாலும் தேசிய அளவில் பரம எதிரிகளான காங்கிரஸ் பாஜக நேரடியாக மோதிக் கொள்வதால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் இருந்தாலும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவை அம்மாநிலத்தின் பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது. அதை சரி செய்ய கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மாநில மக்களின் மனக்குறையாக உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் மாநில அரசு முறையாக கையாளவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் மாநில பாஜக தலைவர்களிடையே நடந்துவரும் பனிப்போர், உட்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி போன்றவற்றால் கட்சியின் கட்டுக்கோப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கோஷ்டி மோதல்கள் இருந்து வருகிறது. முன்னாள் உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் மாநில தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் ஆகியோர் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அதில் கட்சித் தலைமை தலையிட்டு பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் கட்சிக்குள் அடுத்தடுத்த உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டு வருவது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில்தான் பாஜக காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி உத்தரகாண்ட் மாநிலத்தில் கால்பதிக்க தொடங்கியுள்ளது. புதிய வரவான ஆம் ஆத்மி உத்ரகாண்டில் அதிக வாக்குகளை பெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக வின் வாக்குகளை ஆம் ஆத்மி சிதறடிக்கும் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் என்பது மிக குறைவாக இருக்கும் என்பதால் ஆம் ஆத்மி வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 31-37 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 30-36 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் என்றும் சமீபத்தில் ஏபிசி செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகா 36 முதல் 42 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 25-31 இடங்கள் வரை கைப்பற்ற கூடும் என்றும் ஆம் ஆத்மி 0-2 இடங்களை மட்டும் கைப்பற்ற கூடுமென்றும் கணித்துள்ளது.

இந்தியா நியூஸ் ஜன்கி பாத் செய்தி நிறுவன கருத்து கணிப்பு :- 

இந்நிலையில்தான் இந்தியா நியூஸ் ஜன்கி பாத் செய்தி நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரசுடன் குறைந்த வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கணித்துள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் 34-39 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 27-33 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.