நாற்பது தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பதினெட்டு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தலை முடித்துவிட்டு ‘ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா’ என்று அமர்ந்த தமிழக அரசியலின்  இருபெரும் கட்சிகளையும், நான்கு தொகுதி இடைத்தேர்தல் இதோ விரட்ட துவங்கிவிட்டது. 

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி எனும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்துவிட்டு பிரசார பணிகளுக்கான விஷயங்களை துவக்கிவிட்டது தி.மு.க. ஆனால் அ.தி.மு.க.வோ நாளைதான் விருப்ப மனுவை வழங்குகிறது. இந்த மனுக்கான கட்டண தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரம். நான்கு தொகுதிகளிலும் வாய்ப்பு கேட்டு  தொகுதிக்கு தலா பத்து பேர் மனு கட்டினாலே பத்து லட்சம் ரூபாய் வசூலாகிவிடுமே என்பது கழகத்தின் ‘வருவாய்’ கணக்கு. 

இந்நிலையில் நான்கு தொகுதிகளில் ஒன்றான கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதியில் தனக்கு சீட் கேட்டு மாஜி அமைச்சரான செ.ம.வேலுசாமி தலைமைக்கு பெரிய நெருக்கடி கொடுக்கிறார். உண்மையிலேயே கில்லாடி அரசியல்வாதிதான் இவர். மாஜி எம்.எல்.ஏ., அமைச்சர், மேயர் என்று மக்கள் மன்ற பதவிகளும், மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் என்று கட்சி பதவிகளும் வகித்தவர் இவர். அரசியலில் மேல் எழும்பி வர ஒரு சின்ன நூல் கிடைத்தாலும் அதையே பெரிய வடம் ஆக்கி, பாதாளத்திலிருந்து பகுமானமாக வெளியேறி வந்துவிடும் தில்லு படைத்தவர். 

இதனால் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எம்.எல்.ஏ.வாகி, தனது பழைய ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு மீண்டும் அமைச்சர் பதவி கேட்பார், மாவட்ட செயலாளர் பதவி கேட்பார்! எனவே இவருக்கு வாய்ப்பு கொடுப்பது நமது அரசியல் வாழ்க்கைக்கு நல்லதில்லை! என நினைக்கிறாராம் கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வி.ஐ.பி.யான  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 

இதை ஸ்மெல் செய்துவிட்ட செ.ம.வேலுசாமி நேரடியாகவே முதல்வரின் கவனத்துக்கு தனது கோரிக்கையை கொண்டு சென்றவர், “நான் கோயமுத்தூர் மாவட்ட கழகத்துல எவ்வளவு செல்வாக்கு வெச்சிருக்கிற ஆள்-ன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை தலைவரே. அம்மா இறந்த  பிறகு ரெண்டு வருஷத்துக்கும் மேலா உங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல், என் ஆதரவு படையோடு உங்களுக்கு விசுவாசமாதான் இருக்கேன். 

என்னை மறுபடியும் மேலே ஏற்றிக் கொள்ள தானா ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்குது. அதனால எனக்கு சீட் கொடுத்து அங்கீகாரம் பண்ணுங்க. கொங்கு மண்டலத்துல நம்ம கட்சி முக்கியஸ்தர்கள் எல்லாரும் நல்லா இருக்கிற மாதிரி நானும் நல்லா இருந்துட்டு போறேன். சில பேரோட பேச்சை கேட்டு, என் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கல் பண்ணிடாதீங்க தலைவரே. 

ஒருவேளை என் விசுவாசத்துக்கான மரியாதை தரப்படலேன்னா, வேற வழி தேடிக்க வேண்டிதான். என் செல்வாக்கு, அரசியல் திறமை மேலே நம்பிக்கை வெச்சு நெடுங்காலமா கூப்பிட்டுட்டு இருக்கிறாரு தினகரன். எனக்கு நம்ம கழகத்தையோ, உங்கள் தலைமையையோ விட்டுப் பிரிய மனசில்லைதான். ஆனால் என் ஆதரவாளர்களுக்கும் பதில் சொல்லணுமில்லையா.

மனசு வைங்க தலைவரே!” என்று விரிவாக பேசியிருக்கிறாராம். 
தலைமை கழக நிர்வாகிகளோ ‘எவ்வளவு பக்குவமா தலைமையை மிரட்டுறார் பாருங்க. இதுவே பெரிய அரசியல்தான்யா!’ என்று மிரண்டிருக்கிறார்களாம்.