தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை அதிமுக தொடங்கிவிட்டது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், 7 அபர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த விகாரம் தொடர்பாக ஆளுநர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கூறுவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி;- காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை அதிமுக தொடங்கிவிட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக திமுக ஆதரவாளர்களை, பெயர்களை நீக்கியுள்ளனர். முறைகேடு செய்யவே ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தேர்தல் நேரத்தில் மோதிக் கொள்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.